செய்திகள்

தேனியில் பிளாஸ்டிக் அரிசியா? - அதிகாரிகள் சோதனையில் 2 ஆலைகளுக்கு நோட்டீஸ்

தேனியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மாலை மலர்

தேனி:

தேனியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்டம் தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி தேனியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகுணா தலைமையில் பாண்டியராஜன், மோகன்தாஸ், இளங்கோ ஆகியோர் தேனி அல்லிநகரம், பூதிபுரம் செல்லும் சாலை, பழனிசெட்டிபட்டி, அன்னஞ்சி ஆகிய இடங்களில் உள்ள அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அரிசி விற்பனை செய்யும் குடோன்கள், ஆலைகள், அரவை நிலையங்கள் ஆகிய இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை அதே சமயம் தேனி அல்லிநகரத்தில் 2 ஆலைகளில் இருந்த அரிசி சிப்பங்களில் தயாரிப்பு தேதி மற்றும் பேக்கிங் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து அந்த 2 ஆலைகளுக்கும் அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

அந்த ஆலைகளில் உணவு பாதுகாப்பு தரச்சான்று எண் இல்லாமலும், அரிசி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த 2 ஆலைகளில் இருந்த அரிசியை மாதிரி எடுத்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு முடிவு வந்த பிறகே மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.