செய்திகள்

கும்பகோணம் கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனையா?: நகராட்சி ஆணையர் ஆய்வு

கும்பகோணம் கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மாலை மலர்

கும்பகோணம்:

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் முட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இது தொடர்பாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் அதே பகுதியில் செயல்படும் ஒரு மளிகை கடையில் முட்டை வாங்கி வந்து ஆம்லேட் செய்தார். அப்போது அதில் இருந்து பிளாஸ்டிக் வாசனை வீசியதால் சந்தேகமடைந்த அவர் மற்றொரு முட்டையை உடைத்து பார்த்தபோது முட்டை சுருங்கி போய் இருந்தது. இதுபற்றி அவர் புகார் செய்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை வாங்கி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையொட்டி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலகத்துக்கும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கும் தொடர்ந்து பல புகார் வந்தன.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி, நகர் நல அலுவலர் பிரேமா, ஆய்வாளர் டேவிட் ஆகியோர் கும்பகோணம் கடைவீதியில் உள்ள முட்டை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் முட்டைகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சில முட்டைகளை உடைத்து பார்த்தனர். இதனால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews