சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கல்குவாரிகளையும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தையும் நம்பிதான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீர், குடிநீராக மாற்றப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் தென்சென்னை பகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள குடிநீர் தேவையை விவசாய கிணறுகள் மற்றும் நெய்வேலி சுரங்கம், ஏரிகளில் குறைவாக உள்ள தண்ணீர் பூர்த்தி செய்து வருகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க நிரந்தர தீர்வாக கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிதண்ணீர் பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து மொத்தம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பெறப்பட்டு வருகிறது.
இதுதவிர நெம்மேலி அருகே ரூ.1,350 கோடி மதிப்பில், 150 மில்லியன் லிட்டர் பெரும் அளவில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை அடுத்துள்ள போரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
“இந்த நிலையங்களில் இருந்து 750 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற முடிவு எடுத்து உள்ளதாகவும், இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் ஏரிகளை நம்பி இருக்க வேண்டியதில்லை” என்றும் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.