நீதித்துறை செயல்பாட்டின் முன்னோடியாக திகழ்ந்த இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பக்வதி டெல்லியில் காலமானார். நீதித்துறையில் பொது நல வழக்கினை அறிமுகப்படுத்திய பக்வதி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 95 வயதாகும் பக்வதிக்கு பிரபாவதி பக்வதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பக்வதியின் இறுதிச் சடங்கு வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் 17-வது தலைமை நீதிபதியான பக்வதி, உச்சநீதிமன்றத்தில் ஜுலை 1985 முதல் டிசம்பர் 1986 வரை நீதிபதி பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த 1973 ஜுலையில் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறையில் பொது நல வழக்கினை அறிமுகப்படுத்திய காரணத்திற்காக இந்திய நீதித்துறை செயல்பாட்டின் முன்னோடி என்று அழைக்கப்பட்டார்.
பி.என்.பக்வதியின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீதித்துறைக்கு பக்வதியின் அர்ப்பணிப்பு அளப்பறியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.