செய்திகள்

பிராந்திய கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பினராயி விஜயன் எதிர்ப்பு

தேசிய அளவில் காங்கிரசுடன் பிராந்திய கட்சிகள் கூட்டணி அமைக்க பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தருணத்தில் பிராந்திய கட்சிகள் கரம்கோர்ப்பதற்கான முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகரராவ் உள்ளிட்டோர் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்-மந்திரியுமான பினராயி விஜயன், டெல்லியில் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்று இருந்தார். அப்போது அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அவர், “இப்போது பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ளன. இவற்றின் கூட்டணி, தேர்தல்களில் ஒரு உண்மையான மாற்றாக அமைய முடியும். ஆனால் தேசிய அளவில் ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் (காங்கிரஸ்) கரம் கோர்ப்பதில் அர்த்தம் இல்லை” என கூறினார். இது, தேசிய அளவில் காங்கிரசுடன் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்வதற்கு அவரது எதிர்ப்பை காட்டுவதாக அமைந்து உள்ளது.

தொடர்ந்து பினராயி விஜயன் கூறியதாவது:-

அரசியல் சாசன அமைப்புகளை அவர்கள் (பாரதீய ஜனதா கட்சியினர்) சீரழித்து வருகின்றனர். அரசியல் சாசன அமைப்புகள், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. இது வருந்தத்தக்கது. இந்த நிகழ்வுகளால் மதச்சார்பற்ற சக்திகள் வேதனை அடைகின்றன.

இங்கு மதச்சார்பின்மை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதற்கு ஒரு இயக்கம் உருவாகும்.

ஒரு மாற்றத்தை எப்படி உருவாக்குவது என்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு வேறுபாட்டை காட்டமுடியும் என்கிறபோது, அது ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வரும். அது அரசியல் ரீதியில் நமக்கு பலனைத் தராமல் போகலாம். ஆனால் யாரை தோற்கடிக்க வேண்டுமோ, அவர்களை தோற்கடிப்பதற்கு உதவுவதின் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், ஜனநாயக நெறிமுறைகள் ஒழிக்கப்படுகின்றன என்று தான் அர்த்தம்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதற்கு போதுமான ஆதரவு இருக்கிறது. அப்படி இருக்கிறபோது, அதை தடுத்து நிறுத்த எப்படி ஒருவர் முயற்சிக்க முடியும்?

சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை சபாநாயகர் எண்ணி உறுதி செய்ய முடியவில்லை என்று சொல்கிறார்கள். இது கேலிக்கூத்தானது. இது இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி. இது நாடாளுமன்ற ஜனநாயக முறையினை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.