தர்மபுரி:
தர்மபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது.
தற்கொலை செய்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை இந்த பரிசோதனை கூடத்தில் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள். டாக்டர்கள் ஆலோசனைப்படி மருத்துவ பணியாளர்கள் இறந்தவரின் உடலை வெட்டி உடல் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்கள். கொலை செய்யப்பட்டவரின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் உள்ளன? அரிவாளால் வெப்பட்டப்பட்டாரா? கத்தியால் குத்தப்பட்டாரா? என்பதை பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பார்கள்.
அதேபோல மர்மமாக இறந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தெரியவரும். டாக்டர்களின் கட்டளைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் உடற்கூறு செய்வார்கள்.
அந்த உடல்கூறு அறிக்கையை டாக்டர் சொல்ல, சொல்ல இன்னொரு ஊழியர் அறிக்கையாக எழுதுவார். இது வழக்கமாக உள்ள நடைமுறையாகும். ஆனால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை டாக்டர்கள் அல்லாத மருத்துவ பணியாளர்கள் சிலர் பரிசோதனை செய்து கொண்ட வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இறந்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் உடலை டாக்டர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தி அதன் பிறகு தரப்படும் மருத்துவ அறிக்கை சரியாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை தலையிட்டு உண்மை நிலையை அறிய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.