செய்திகள்

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் பி.எச்டி. மாணவி ஓட்டம்

திருவொற்றியூரில் பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் மாணவி பெற்றோர் எதிர்ப்பை மீறி, பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் சென்றார்.

மாலை மலர்

திருவொற்றியூர்:

சென்னையை அடுத்த திருவொற்றியூர், வசந்த நகரை சேர்ந்தவர் குமார் என்பவரது மகள் மித்ரா (வயது 26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அடையாறில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு படித்துவந்தார்.

கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவி அடையாறு பகுதியில் வேளச்சேரியை சேர்ந்த பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய ரவிக்குமார் (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மாணவியை மீட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது மாணவி தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததாகவும், தனக்கு அவரை பிடிக்கவில்லை எனவும் கூறினார். வேளச்சேரியை சேர்ந்த ரவிக்குமாரை திருமணம் செய்துகொண்டு ஆராய்ச்சி படிப்பை தொடரப்போவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் மாணவியை தேடி ரவிக்குமார் வக்கீல்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மேஜரான மாணவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் மாணவி ரவிக்குமாருடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.

பின்னர் போலீசார் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் மாணவி பெற்றோர் எதிர்ப்பையும் மீறி போலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே வந்தவுடன் ரவிக்குமாருடன் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.