சென்னை:
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி விதிப்பு என்ற முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டதால் ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.
ஓட்டல் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கிரி வகைகள், தங்கம், ஜவுளி, உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.
மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்து - மாத்திரைகளுக்கும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கலால்வரி, மதிப்பு கூட்டுவரி என தனித்தனியாக மருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டது.
தற்போது மருந்துகளுக்கு 3 வகையான ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை உயராது என்ற போதிலும் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து குறையாது.
இது குறித்து தமிழ்நாடு கிளை மருந்து உற்பத்தியாளர் சங்க தலைவர் முகம்மது யூசூப் கூறியதாவது:-
மருந்துகளுக்கு முன்பு வாட் 8 சதவீதமும், கலால் வரி 12 சதவீதமும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மூலம் மருந்துகள் 3 வகையாக பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவித ஜி.எஸ்.டியும், பட்டியல் இடப்பட்ட, டாக்டர்கள் பரிந்துரைக்கின்ற மருந்துகளுக்கு 7 சதவீதமும் ஓ.சி.டி. தயாரிப்புகளான ‘அனாசின்’, சாரிடர், விக்ஸ் போன்ற மருந்துகளுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மருந்துகள் விலை குறையும் என்று கூற முடியாது. ஆனால் கூடாமல் இருக்கலாம்.
மேலும் மருந்துகளை அடைத்து விற்க பாட்டில், பாயில் மருந்துகளை உள்ளடக்கும் சிரஞ்சி, டியூப் போன்ற உபகரணங்களுக்கு வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அதனால் மருந்து விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது உள்ள மருந்துகள் விற்பனை புதிய மருந்துகள் வந்தால் தான் விலையேற்றம் குறித்து தெளிவாக கூற முடியும். ஆனால் தற்போதைய நில வரப்படி மருந்துகள் விலையில் எவ்வித ஏற்றமும் இல்லை.
சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மோகன்குமார் மருந்துகள் விலை தற்போது கூடவில்லை. விலை உயருமா என்பது ஆகஸ்ட் மாதம் தான் தெரியும். தற்போதைய இருப்புகளை 7 சதவீத நஷ்டத்தில் தான்விற்பனை செய்கிறோம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.