கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெற்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நச்சலூர் பேருந்து நிலையம் அருகே மருந்து ஆய்வகம் நடத்தி வந்தார்.
தினமும் இரவு பணி முடிந்ததும் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்றிரவு பணி முடிந்ததும் அவர் நச்சலூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். நச்சலூர்-தெற்கு மாடுவிழுந்தான்பாறை இடைப்பட்ட சாலையில் செல்லும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென சரவணனை வழிமறித்ததுடன், தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரவணனை சரமாரி வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் குளித்தலை போலீஸ் டி.எஸ்.பி. கும்மராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சரவணனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணன், மருத்துவம் படிக்காத நிலையில், தனது மருத்துவ ஆய்வகத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனால் சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் நெரூர் காளியம்மன் கோவில் தெரு வை சேர்ந்த சீனிவாசன் மகன் புலிக்குட்டி என்ற பாஸ்கர் (34), பெயிண்டர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது சித்தப்பா சுப்பிரமணியனின் மகன் சரவணன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
நேற்றிரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சரவணன், அவரது தாய் சுசீலா, சரவணனின் நண்பர்கள் ஜீவா, ஜெயபாலன், பாலா என்ற பாவாடை ஆகிய 5 பேரும் சேர்ந்து பாஸ்கரை அரிவாளால் வெட்டியதுடன், கல்லாலும் சரமாரி தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) அன்பு செல்வன் விசாரணை நடத்தி தலைமறைவான கொலையாளிகள் 5 பேரையும் தேடி வருகிறார். இந்த 2 கொலை சம்பவங்கள் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.