புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது.
புதுச்சேரி, விசாகப்பட்டினம், சண்டிகர், உதைப்பூர் மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய நகரங்களில் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இது, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். பின்னர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு பதிலாக, காலை 6 மணிக்கு விலை மாற்றத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டதால், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை மாற்றம் பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில், மொபைல் ஆப்ஸ் மற்றும் வெப் போர்டல் ஆகியவற்றின் மூலம் தெரியப்படுத்தப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயிள் நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம்.
முன்னதாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.
நான்கு மெட்ரோ நகரங்களில் இன்றையை பெட்ரோல், டீசல் விலை:-
புதுடெல்லி - ரூ.65.48(பெட்ரோல்), ரூ.54.49(டீசல்)
மும்பை - ரூ.68.02, ரூ.59.90
சென்னை - ரூ.68.03, ரூ.57.41
கொல்கத்தா - ரூ.68.03, ரூ.56.65