சேலம்:
சேலம் குகை, கே.எஸ். தியேட்டர் அருகே தெற்கு தபால் நிலையம் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் தபால் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தபால் நிலைய வாசல் அருகே தரைப்பகுதி கருகிய நிலையில் காணப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. அருகில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, மது பாட்டிலில் யாரோ மண்எண்ணெயை நிரப்பி வீசி இருக்கலாம் என கருதுகிறோம். பெட்ரோல் குண்டு வீசி இருந்தால் கட்டிடம் தீப்பிடித்து எரிந்திருக்கும். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தபால் நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.