செய்திகள்

குல்பூஷன் ஜாதவுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது: லாகூர் கோர்ட்டில் வழக்கு

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் அரசு மன்னிப்பு வழங்கக்கூடாது எனக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவருக்கு தூதரக உதவியும் மறுக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வெளியிடும்வரை, குல்பூஷன் ஜாதவின் தண்டனையை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு மன்னிப்பு வழங்கி தன்னை விடுதலை செய்யும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு ஜாதவ் கருணை மனு அனுப்பி உள்ளார். இந்த மனு பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், முகமது அகமது நக்வி என்பவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், குல்பூஷன் ஜாதவ் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், நவாஸ் ஷெரீப் அரசாங்கம் அவருக்கு மன்னிப்பு, தண்டனை குறைப்பு போன்ற எந்த சலுகையும் காட்டுவதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலதாமதம் செய்யாமல் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.’ என கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT