அஜய் மிஷ்ரா 
செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

விவசாயிகள் கூட்டத்திற்குள் மத்திய மந்திரி மகனின் கார் புகுந்ததுதான் லக்கிம்பூர் வன்முறைக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது.

மாலை மலர்

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று முன்தினம் விவசாய போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. இதில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அமைச்சர் உடன் வந்த கார் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.

விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்த காரில் அஜய் மிஷ்ராவின் மகன் இருந்தார் என செய்தி வெளியானது. இதனால் விவசாயிகள் கோபம் அடைந்து காரை எரித்தனர். அதன்பின் வன்முறை வெடித்தது.

ஆனால், தனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என அஜய் மிஷ்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறை காரணமாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வழக்கறிஞர்கள் செய்துள்ள மனுவில் ‘‘போலீசார் இணை அமைச்சர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ சம்பந்தப்பட்ட உயர்மட்ட நீதி விசாரணையை அமைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.