செய்திகள்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 8-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள செக்கிடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு சித்தரசு(17), தினேஷ்குமார்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இளைய மகன் தினேஷ்குமார் தினமும் சைக்களில் சென்று ஊர் அருகில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று அதிகாலை மெட்டுக்கல் பகுதியில் உள்ள பால்சொசைட்டியில் பால் ஊற்றி விட்டு சைக்கிளில் வீடு திரும்பினான். அப்போது சாலையோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த தினேஷ்குமார் மீது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது.

இந்த விபத்தில் சைக்கிள் பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கியது. பள்ளி வாகனம் சுமார் 100 அடி தூரம் இழுத்து சென்றதில் சம்பவ இடத்திலேயே தினேஷ்குமார் பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆவேசம் அடைந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பொது மக்கள் பள்ளி வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் டீசல் டேங்கினை சேதப் படுத்தினார்கள். மேலும் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

கலெக்டர் நேரில் வந்தால் தான் மாணவன் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற விடுவோம் என பொது மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் சமாதானம் பேசி வருகின்றனர்.

SCROLL FOR NEXT