பெரும்பாறை:
திண்டுக்கல் அருகே பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையில் பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாதையில் அதிகாலையில் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் செல்கிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பஸ் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு சித்தரேவு-பெரும்பாறை வழியாக தாண்டிக்குடிக்கு சென்றது.
இந்த பஸ் வத்தலக்குண்டு ஏணிக்கல் அருகே உள்ள நாடுகண்டான் புளியமரம் என்ற இடத்தில் சென்ற போது ஒரு புலி சாலையின் தடுப்பு சுவரில் நின்று கொண்டிருந்தது.
இதைப்பார்த்த டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பஸ் அங்கே நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றதும் பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பீதியில் உள்ளனர்.