செய்திகள்

பெரும்பாறை, மஞ்சள்பரப்பு பகுதியில் எலுமிச்சை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

பெரும்பாறை மற்றும் மஞ்சள்பரப்பு பகுதியில் எலுமிச்சை வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாலை மலர்

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, பன்றிமலை, ஆடலூர், புல்லாவெளி, சோலைக்காடு, கே..பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் காபி, மிளகு, வாழை, ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் ஊடுபயிராக எலுமிச்சை, கிடா நார்த்தங்காய் பயிரிடப்பட்டு உள்ளது.

பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, வெள்ளரிக்காரை போன்ற பகுதியில் விலையும் எலுமிச்சை, கிடா நார்த்தங்காய் மஞ்சள்பரப்பு பகுதியில் உள்ள கமி‌ஷன் கடைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது எலுமிச்சை, கிடா நார்த்தங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் தற்போது முதல் தரம் எலுமிச்சை ஒரு கிலோ ரூ.20-க்கும், 2-ம் தரம் ரூ.15-க்கும் 3-ம் தரம் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது பெரும்பாறை, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழைபெய்து வருதால் எலுமிச்சை, கிடா நார்த்தங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கமி‌ஷன் கடைகளுக்கு வரத்து அதிகரித்ததால் விலைகுறைந்துள்ளது என்றனர்.