செய்திகள்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: பெரு நாட்டின் முன்னாள் அதிபருக்கு சிறை

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பெரு நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு 18 மாதங்கள் சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மாலை மலர்

லிமா:

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலண்டா ஹூமாலா. இவரது மனைவி நாடின் ஹெரேடியா. இவர்கள் இருவர் மீதும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு, அங்கு லிமா நகரில் உள்ள கோர்ட்டில் நீதிபதி ரிச்சர்டு கான்செப்சியான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெர்மன் ஜூவாரெஸ் வாதாடுகையில், “இந்த வழக்கில் இருவரையும் உடனே பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்கள் தப்பி ஓடுவதில் இருந்தும், வழக்கில் தலையிடுவதில் இருந்தும் தடுக்க முடியும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதை நீதிபதி ரிச்சர்டு கான்செப்சியான் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஆலண்டா ஹூமாலாவையும், அவரது மனைவி நாடின் ஹெரேடியாவையும் 18 மாதங்கள் சிறைக்காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

இதுபற்றி அரசு வக்கீல் ஜெர்மன் ஜூவாரெஸ் டுவிட்டரில், “இது அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை உறுதி செய்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.