சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் கிறிஸ்டோபர் கலந்து கொண்டு சுமார் 3 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்தி, சிறப்புரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிறிஸ்டோபர், ‘இந்திய-சீனா இடையே போர் மூளுவதற்கான வாய்ப்பில்லை. மாறாக, இருதரப்பிலும் கலந்துபேசி ஒற்றுமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் டி.ஆர்.டி.ஓ. சார்பில் அறிவியல் சார்ந்த நிரந்தர கண்காட்சி அமைக்கப்படும். அதே இடத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை ஈர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டார்.
58 ஆராய்ச்சி மாணவர்கள், 284 பட்ட மேற்படிப்பு மாணவர்கள், 96 பல் மருத்துவ மாணவர்கள் 2392 இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் பட்டம் பெற்ற இவ்விழாவில் இஸ்ரோ திட்டப்பணி இயக்குநர் வி.நாராயணன், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் மரீஜான்சன், சார்வேந்தர் மரியஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.