பெரியபாளையம்:
பெரியபாளையத்தை அடுத்த காரணி கிராமத்தில் உள்ள ஆற்றில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் போலீசார், வருவாய்த்துறையினரின் கண்காணிப்பையும் மீறி மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ஆரணி ஆற்றில் இருந்து லாரியில் மணல் அள்ளினர். இதனை அறிந்து ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்றனர்.
பொது மக்களை பார்த்ததும் உஷாரான மணல் கடத்தல் கும்பல் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியின் கண்ணாடியை கிராம மக்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் லாரிக்கு தீ வைத்து சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி போலீசார் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.