கைது 
செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே வனப்பகுதியில் பதுக்கி ஆதிவாசி மக்களுக்கு மதுவிற்ற 4 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே வனப்பகுதியில் பதுக்கி ஆதிவாசி மக்களுக்கு மதுவிற்ற 4 பேர் கைது

கவுண்டம்பாளையம்:

தமிழ்நாட்டில் இருந்து சாலை வழியாக கேரளாவுக்கு மது கொண்டு செல்ல அம்மாநில வனத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தது. இதையடுத்து சிலர் வனப்பகுதி வழியாக கேரள வனப்பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குட்ட மலைப் பகுதியில் காட்டுக்குள் பதுக்கி மது விற்பனை செய்யப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் வனசரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கோபனாரி வனப்பகுதியில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் காரமடை தோலாம்பாளையத்தை அடுத்த தீன்குழி பகுதியை சேர்ந்த சாலமன்(58), கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டத்துறையை சேர்ந்த முருகேஷ்(35), முருகேசன்(35), சோலை கிருஷ்ணன்(29) என்பது தெரிந்தது. அவர்கள் காட்டுக்குள் பதுக்கி மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சமவெளி பகுதிகளில் இருந்து ரூ.100 கொடுத்து மதுவை வாங்கி வந்து மலை பகுதிகளில் வாழும் கேரள-தமிழக ஆதிவாசி மக்களுக்கு ரூ.150-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து வனத் துறையினர் அவர்களை பிடித்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 37 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனசரகர் சுரேஷ் கூறியதாவது:-

வனப்பகுதிகளில் மது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இனி இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வனஉயிரின சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.