கொலை 
செய்திகள்

பெரியகுளத்தில் தொழில் போட்டியில் இறைச்சி கடைக்காரர் அடித்து கொலை

பெரியகுளத்தில் தொழில் போட்டியில் இறைச்சி கடைக்காரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் தென்கரை வாகம்புலி தெருவில் வசித்து வரும் ஹக்கீம் மற்றும் ஜெய்லானி மகன் ஜாபர் சேட் ஆகியோர் தாமரை குளம் கல்லூரி விலக்கில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் சையது முகமது என்பவரின் மாமனாரும், கோழிக்கறிக்கடை நடத்தி வருகிறார்.

தனது கடைக்கு அருகில் சுலைமான் என்பவருக்கும் இறைச்சி கடை வைத்து கொடுத்தார். இந்நிலையில் ஹக்கீம் மற்றும் ஜாபர் ஆகியோருக்கும் சுலை மானுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட தகராறில் சுலைமானை அவர்கள் தாக்கினர். இதையறிந்ததும் சையது முகமது (வயது 40) வாகம்புலி தெருவில் உள்ள ஹக்கீம் மற்றும் ஜாபர் ஆகியோர் வீட்டுக்கு சென்று விபரம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சையது முகமது கடுமையாக தாக்கப்பட்டார்.

படுகாயமடைந்த சையது முகமது பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.