செய்திகள்

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை திருடிய கும்பல்

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே எண்டப்புளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 36). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று மனைவியுடன் கடைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், தோடு உள்பட 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மாலை நேரத்தில் வீடு திரும்பிய ஜெகன் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் சோதனையிட்ட போது நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது இது குறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

பெரியகுளம், வடகரை பள்ளிவாசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 41). பழ வியாபாரி. சம்பவத்தன்று தனது 2 செல்போனை வீட்டில் வைத்திருந்தார். இதனை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து பெரியகுளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சூர்யாவை கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.