செய்திகள்

பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பெரியகுளம்:

அ.தி.மு.க.வின் இரண்டு பிரதான அணிகளாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்படத் தொடங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துவிடும் என தலைவர்கள் நினைத்தனர். ஆனால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்படத் தொடங்கியதால் புதிய சிக்கல் உருவானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும்வரை ஓயமாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரிய குளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தனது பெயருக்கு தபாலில் கடிதம் வந்ததாகவும், அதில், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.-ஐ ஆதரிக்காவிட்டால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

புகார் அளித்துள்ள கதிர் காமு, டிடிவி தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.