வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான அரசு காப்பு காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் மான்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை விட்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மான்கள் வருகிறது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மானை மீட்டு பூலாம்பாடி கால்நடை உதவி மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த மானை அரசு காப்பு காட்டில் புதைத்தனர். மான் மீது சில காயங்கள் இருந்ததால் யாரேனும் மானை வேட்டையாடியபோது தப்பி வந்து இறந்து விட்டதா? அல்லது அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி இறந்ததா? என வேப்பந்தட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தண்ணீர் தேடி பெரம்பலூர் நான்கு ரோடு முத்துலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு புள்ளி மான் சுற்றி திரிந்தது. அப்போது அந்த மானை ஒரு நாய் கடித்து குதறியதில், மான் சம்பவ இடத்திலேயே செத்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் வனத்துறையினர் இறந்த மானின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் இறந்தது 4 வயதுடைய பெண் மான் என்பதும், தற்போது அந்த மான் சினையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மானின் உடலை வனத்துறையினர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.