பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 490 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுகாதாரம், கட்டமைப்பு, உணவு, முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் 4 அங்கன்வாடி மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆலத்தூர் வட்டாரத்தில் புதுவிராலிப்பட்டி, பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர் இந்திரா நகர், வேப்பந்தட்டை வட்டாரத்தில் அம்பேத்கர் காலனி மற்றும் வேப்பூர் வட்டாரத்தில் சின்னவெண்மணி காலனி ஆகிய 4 அங்கன்வாடி மையங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது.
அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ. தரச்சான்றை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம், மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி காண்பித்து வாழ்த்து பெற்றார்.