செய்திகள்

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள்: வெங்கையா நாயுடு பேச்சு

நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கினால், அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என வெங்கையா நாயுடு கூறினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கினால், அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என வெங்கையா நாயுடு கூறினார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 2 நாள் மாநாடு நடைபெற்று வந்தது. நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மேல்-சபை தலைவருமான வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் வாரம் முடங்கிப்போனது குறித்து வேதனை வெளியிட்டார்.

இடையூறுகளால் சபைகள் முடங்கிப்போவதை அவர், “சபையின் மையப்பகுதியில் கூடி நிற்பது நல்லதல்ல. இந்த மனோபாவம் தொடருமானால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்” என கூறி எச்சரித்தார்.

சபைகளில் கூட்டம் நடைபெறுபவதற்கு தேவையான குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கூட (கோரம்) இல்லாமல் போவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பல தருணங்களில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், தான் அதற்கான மணியை ஒலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சபையில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு மட்டும் அல்ல; எதிர்க்கட்சிக்கும் அந்தப் பொறுப்பு உண்டு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, சட்டசபை உறுப்பினர்களும் சரி மக்கள் சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாதபட்சத்தில், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறியவர்கள் ஆகி விடுவார்கள்.

உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அரசு தனது வழியில் செல்ல வேண்டும். இதுதான் முன்னே செல்வதற்கான ஒரே வழி.

நாடாளுமன்ற, சட்டசபைகளின் கூட்டம் கூடுதல் நாட்கள் நடைபெற வேண்டும்.

நாடாளுமன்றங்களிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.