செய்திகள்

பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது: சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு

ஜெயலலிதா 2 முறை பன்னீர்செல்வத்தை தமிழக முதல்வராக ஆக்கி இவர்தான் எனது வாரிசு என்பதை சுட்டிக் காட்டியுள்ளார் என்று சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆறுமுகநேரியில் நடைபெற்றது. அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் நடந்த விழாவிற்கு நகர அவைத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாபேரவை நகர செயலாளர் காந்தி ராமசாமி, வார்டு பேரவை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாவட்ட துணை செயலாளர் கராத்தே ரஜித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

அரசியல் விழிப்புணர்வு மிகுந்த ஆறுமுகநேரியில் 14-வது ஆண்டாக இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்படுவதை பாராட்டுகிறேன். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட சோதனைகளால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு, புரட்சி தலைவி அம்மா அணியாக பன்னீர் செல்வம் தலைமையில் செயலாற்றி வருகிறோம். ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு சசிகலாதான் காரணம் என்றும் சிறுவர்கள் கூட பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் இப்போது சசிகலா மற்றும் தினகரனின் பினாமி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 ஆண்டுகள் பதவியில் இருந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட கூட்டம்தான் அவர்களிடம் சேர்ந்துள்ளனர்.

ஜெயலலிதா 2 முறை பன்னீர்செல்வத்தை தமிழக முதல்வராக ஆக்கி இவர்தான் எனது வாரிசு என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். மாறாக எந்த சூழ்நிலையிலும் சசிகலா தரப்பிற்கு அதிகாரத்தை வழக்கவில்லை. தமிழக மக்கள் இதனை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் எங்கள் அணிக்கு அவர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காயல்பட்டினம் நகர அவைத்தலைவர் முத்து, ஜஸ்டின், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.