செய்திகள்

குடிநீர் தொட்டிக்குள் பூனை இறந்து கிடந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் அவதி

மணலி ஜெ.ஜெ.நகரில் குடிநீர் தொட்டிக்குள் பூனை இறந்து கிடந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

மாலை மலர்

திருவொற்றியூர்:

மணலி ஜெ.ஜெ.நகரில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் தொட்டிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி குடிநீர் வாரியத்தினர் 3 நாட்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிச்செல்வார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டனர். இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், யாரும் வந்து பார்க்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடிநீர் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துர்நாற்றம் வீசிய குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அதில் குடிநீர் தொட்டியின் உள்ளே பூனை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரிந்தது. அதை வெளியே எடுத்து அப்புறப்படுத்திய ஊழியர்கள், குடிநீர் தொட்டியை கழுவி சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த வார்டு முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள், “அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து, தொட்டிகளின் மேல் மூடி அமைத்து கொடுக்க வேண்டும்” என்றனர். அதன்படி மற்ற குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு, அதன்மேல் மூடிகள் போடப்பட்டது.