சாயர்புரம்:
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் ஊராட்சிக்குட்பட்ட அம்மாள்தோப்பு பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலத்தில் அங்கன்வாடி மற்றும் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. அதேபோல் ஏரல் நகரபேருந்து நிலையம் மற்றும் கக்கன் பூங்காவை அப்பகுதியை சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டுத்தரக்கோரி ஏரல் காந்தி சிலை அருகே அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பச்சை பெருமாள் தலைமை வகித்தார். பா.ஜ.க. முன்னாள் மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் கருப்பசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்திற்கு சிபிஎம் செயலாளர் பெஸ்டி முன்னிலை வகித்தார். இதில் கொட்டாரகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் துரை, தமிழினியன், ஜெயந்தி, ஜானகிராமன், வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க வேண்டும் என்பது குறித்து பேசினர். முடிவில் கனி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.