செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜனதா துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவிதுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜனதா துணைத்தலைவர் வக்கீல் வானதிசீனிவாசன் கூறியதாவது:-

தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பங்களை பா.ஜனதா உன்னிப்புடன் கவனித்து வருகிறது. 5 வருடம் ஆளுவதற்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கிய மக்கள் வேதனையோடு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களைப் பற்றி கவனம் செலுத்த முடியாத அரசாக, தங்கள் உட்கட்சி பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில் உள்ளனர்.

இனி சட்டப்படி பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கும் உத்தரவு கடை பிடிக்கப்படுமா? எம்மாதிரியான சூழ்நிலை உருவாகும் என்பது தெரியவில்லை.

இந்த எம்.எல்.ஏ.க்கள் முதலில் கவர்னரை சந்தித்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் நம்பிக்கை இல்லை என்று மனு கொடுத்தார்கள்.

அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றோ அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றோ சொல்ல வில்லை. முதல்வர் என்பவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க் களால் தேர்வு செய்யப்படுபவர். எனவே அவரை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.

அதன் பின்பாக அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இனி அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியாது.

ஏற்கனவே பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போன்ற பல்வேறு வி‌ஷயங்கள் நீதித்துறை தொடர்பான வழக்குகளாக இருக்கிறது. தற்போது ஏற்பட்டு இருப்பதும் ஒரு குழப்பமான சூழ்நிலையே.

இவ்வாறு அவர் கூறினார்.