செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் மண் சரிவால் பாலத்துக்கு ஆபத்தா?

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் பாலம் சேதமடையுமோ என்று பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறது.

1984-ல் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டது. 1996-ல் முதன் முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் கால்வாயில் திடீர் என்று மண் அரிப்பு ஏற்பட்டு கரை நொறுங்கியது. இதனால் கால்வாயில் தண்ணீர் பாயாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. எனினும் அவ்வப்போது பெய்து வரும் மழை நீர் பூண்டி ஏரிக்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் பாலம் உள்ளது. இதன் வழியாக ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

முக்கியம் வாய்ந்த இந்த பாலம் அருகே அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் பாலம் சேதமடையுமோ என்று பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.