கனிம வளத்துறை அதிகாரி வள்ளலுக்கு மாலை அணிவிக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 
செய்திகள்

மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு மாலை-பூங்கொத்து கொடுத்து ஆய்வுக்கு அழைத்ததால் பரபரப்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு மாலை-பூங்கொத்து கொடுத்து ஆய்வுக்கு அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்க பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடவடிக்கை எடுத்தாலும் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், பொருளாளர் அகத்தியன் தலைமையில் திடீரென திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெரிய பூமாலை, பூங்கொத்துடன் வந்தனர்.

அவர்கள் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம், மணல் கடத்தலை தடுக்க ஆய்வுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து மாலை, பூங்கொத்து கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளல் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மணல்குவாரி கூட இயங்காத நிலையில் மாநில அளவில் அதிக மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆனால், அனுமதியின்றி மணல் கடத்தியவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தொடர்ந்து அதிகமாக அபராதம் வசூலிக்கும் மாவட்டமாகவும், மணல் கடத்தலும் அதிகமாக இருந்து வருகிறது.

மாவட்டத்தில் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கரலைபாக்கம் ஏரி, பூச்சி அத்திபேடு, அரண்வாயல், புதுச்சத்திரம், கொத்தியம் பாக்கம், சித்துக்காடு மற்றும் வெங்கல் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் ஒருவர் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை.

அதனால், இப்பகுதியில் மணல் கடத்தப்படுகிற வழித்தடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதியுடன் சோதனைச் சாவடியும், லாரிகளில் ஜி.பி.எஸ் கருவியும் உடனே அமைக்க வேண்டும்.

மேலும், லாரிகளை மடக்கி அபராதம் விதிப்பதோடு கடத்தல்காரர்கள் எவ்வளவு ஆழம், நீளத்திற்கு மணலை அள்ளியுள்ளனர். அதற்கேற்ப மொத்த தொகையும் வசூலிக்க வேண்டும்.

இதில் ஒரு சிலர் மணலை பதுக்கி வைத்து, தரமற்ற அல்லது கடல் மணலை கலப்படம் செய்யும் சமூக விரோதச் செயலும் நடந்து வருவதை திடீர் ஆய்வு செய்து தடுக்க வேண்டும். மேலும், மணல் கொள்ளை அதிகமாக நடைபெறும் கிராமங்களை கண்டறிந்து மணல் லாரிகள் இயங்காமல் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Tamilnews