செய்திகள்

4 தலைமுறையாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது?: ராகுல்காந்திக்கு அமித்ஷா கேள்வி

4 தலைமுறையாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது? என்று ராகுல்காந்திக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று முன்தினம் கொப்பல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

2-வது நாளான நேற்று அவர் பாகல்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கூடலுசங்கமத்தில் உள்ள பசவேஸ்வரா சுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். மேலும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உடன் இருந்தார். அதன் பின்னர் அமித்ஷா பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தொகுதிக்கு உட்பட்ட இலகலில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திரமோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன வளர்ச்சி பணிகளை செய்தார் என்று கேள்வி கேட்கிறார். இது கர்நாடக சட்டசபை தேர்தல். இங்கே உங்கள் கட்சி தான் 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இங்கே உள்ள பிரச்சினை பற்றி பேசுங்கள். 4 தலைமுறையாக ஆட்சி செய்த ‘காந்தி‘ குடும்பமும், காங்கிரசும் இந்திய நாட்டிற்கு என்ன பங்களிப்பை வழங்கியது?. இல்லை என்ன வளர்ச்சிப் பணிகளை செய்தது? என்பதை ராகுல்காந்தி கூற வேண்டும். அதை தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது கர்நாடகத்திற்கு 13-வது நிதி கமிஷன் படி ரூ.88 ஆயிரம் கோடி நிதியை மட்டுமே ஒதுக்கியது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு கர்நாடகத்திற்கு இதுவரை ரூ.2.19 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தராமையா மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கூறி வருகிறார். இந்த நிதி அனைத்தும் சித்தராமையா, மந்திரிகளின் பாக்கெட்டிற்கு சென்றுவிட்டதா?.

நாட்டில் இதுவரை நடந்த 13 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அதேப் போல் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும். முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆட்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் பாதாமியிலும் சித்தராமையா போட்டியிடுகிறார். பாதாமியில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என அவர் பகல் கனவு காண்கிறார். அந்த கனவு பலிக்காது. பாதாமி தொகுதியில் சித்தராமையாவை, பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலு தோல்வி அடைய செய்வார் என்பது உறுதி.

மோடி, பிரதமராக பதவி ஏற்ற பிறகு இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. அதேப் போல் கர்நாடகத்தையும் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றம் செய்ய வேண்டும். அதற்காக பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளரான எடியூரப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர் முதல்-மந்திரி ஆனதும் கர்நாடகத்தை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றி காட்டுவார்.

நான் கர்நாடகத்தில் பயணம் செய்த இடமெல்லாமல் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். இது பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருவதை காட்டுகிறது. தற்போது கர்நாடகத்தில் ‘பா.ஜனதா‘ அலை வீசுகிறது. இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.