பென்னாகரம்:
தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பயோமெட்ரிக்
கருவியில் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வினியோகம் நடக்கிறது. இணைய சேவை சரியாக கிடைக்காத
நிலை ஏற்படுவதால் ஒவ்வொரு நபருக்கும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கைரேகை பதிவு செய்ய தாமதமாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் பென்னாகரம் அடுத்த கோடுப்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு 330 ரேஷன் கார்டுகள் உள்ளது. நேற்று காலை அதிக அளவில் மக்கள் பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால் பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியான முறையில் பதிவு ஆகாததால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயோமெட்ரிக் நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பொருட்களை வாங்க முடியவில்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.