பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் முகுந்தஅய்யன் (வயது 71). தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினிகள் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை காவலாளியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு காவலாளி முகுந்தஅய்யன் கட்டி போடப்பட்டு வாயில் துணியால் திணிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் பள்ளி வளாகத்திற்கு சென்று காவலாளியை கட்டிப்போட்டு மடிக்கணினிகள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.