கொள்ளை 
செய்திகள்

திருவண்ணாமலை அருகே அடகு கடையில் துளைபோட்டு நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை அருகே அடகு கடையில் துளைபோட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கோளப்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கோளப்பாடி மெயின் ரோட்டில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வெங்கடேசன் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை அடகு கடையின் பின்புற சுவர் உடைக்கப்பட்டு துளை போடப்பட்டு கிடந்தது.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடையை திறந்து பார்த்த போது லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.2.50 லட்சம் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி மற்றும் தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நகை கடையில் துளைபோட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT