அமராவதி:
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் மத்திய அரசில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் இடதுசாரி கட்சியினர் இணைந்து பாதயாத்திரையில் ஈடுபட்டனர். இந்த பாதயாத்திரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பி.மது, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷணா, பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பாதயாத்திரை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. பாதயாத்திரை தொடங்கும் முன்னர் தும்மலபள்ளியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்த பாதயாத்திரையின்போது, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது தேசிய ஜனநாயக கூட்டணி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சைக்கிள் பேரணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #AndhraSpecialStatus #JanaSenaPaadayatra #PawanKalyan #tamilnews