செய்திகள்

பட்டுக்கோட்டையில் பெண் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

பெண் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதி தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் செல்வம் (வயது-26) பழைய இரும்பு வியாபாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பெண் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் செல்வம் பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் இருந்து வாவுதோப்பு தெரு செல்லும் வழியில் செல்வம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவரை நேற்று இரவு மர்மநபர்கள் மதுபாட்டிலால் அடித்து கொலை செய்து அங்குள்ள ஒரு பள்ளத்தில் வீசி சென்றுள்ளனர். அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர்.

இது பற்றிய தகவல் கிடைத்தும் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் செல்வத்தை கொலை செய்த 2 பேர் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. அருகில் மதுக்கடை உள்ளதால் அங்கு மது குடித்துவிட்டு வந்த செல்வத்தை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

SCROLL FOR NEXT