திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் அரபு நாடான துபாயில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 19-ந்தேதி துபாயில் இருந்து சொந்த ஊரான கோழிக்கோடு திரும்பினார்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் இவரது உடமைகளை சுங்க இலாகா ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். சோதனை முடிந்து, உடமைகளை பெற்றுக்கொண்ட பயணி, அதில் இருந்த 3 தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டார்.
அவர், இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். அப்போது சுங்க இலாகா ஊழியர் அப்துல் கரீம் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்தான் தனது நகையை திருடி இருக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள் விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் நகை திருடியது யார்? என்பதை ஆய்வு செய்தனர்.
இதில், சுங்க இலாகா ஊழியர் அப்துல் கரீம், பயணியின் நகையை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர், கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 379-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.