செய்திகள்

கட்சி பெயர் -கொடியை முடிவு செய்ய நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை

குக்கர் சின்னத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கட்சி பெயர் மற்றும் கொடியை முடிவு செய்ய தினகரன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #TTVDinakaran

மாலை மலர்

சென்னை:

டி.டி.வி.தினகரனுக்கு பிர‌ஷர் குக்கர் சின்னத்தையும் அவர் கோரும் கட்சியின் பெயரையும் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டு இருந்தது.

மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த டி.டி.வி.தினகரன் இந்த தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்து வரவேற்பதாக தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக சென்னை திரும்பினார்.

இன்று காலையில் அடையாறில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

குக்கர் சின்னம் கிடைத்துள்ள நிலையில் கட்சியின் பெயரை முடிவு செய்வது குறித்தும், கட்சியின் கொடி எந்த கலரில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே கட்சியின் பெயராக, அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரை குறிப்பிட்டு ஒரு பெயரை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார்.

இதில் எந்த பெயரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

இதேபோல் தற்போது பயன்படுத்தி வரும் கட்சி கொடியில் கறுப்பு-சிவப்பு கலருக்கு நடுவே வெள்ளை கலர் இருப்பது போல உள்ளதால் அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது இதே கொடியை பயன்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசித்தார்.

கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதை கவனமுடன் டி.டி.வி. தினகரன் கேட்டு கொண்டார்.

உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்சி பெயர், கொடி அமையும். விரைவில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமி‌ஷனில் கட்சி பெயரை தெரிவிப்போம் என்று கூறினார்.

கூட்டுறவு சங்க தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதாக இந்த தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சி பெயர், கொடி சின்னத்தை தேர்தல் கமி‌ஷனில் கேட்டு வாங்கி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜி.செந்தமிழன், செந்தில்பாலாஜி, பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் சி.ஆர். சரஸ்வதி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். #TTVDinakaran #tamilnews