செய்திகள்

ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். #BudgetSession #Parliament

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1-ம் தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார்.

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதாவை நிறைவேற்றவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும். #BudgetSession #Parliament #tamilnews