செய்திகள்

வேட்பாளர்கள் தேர்வு - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. #EdappadiPalaniswami #ADMK

அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டினார். மகளிர் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கேக் வினியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தையல் எந்திரம், தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உள்பட பல்வேறு குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சுமார் 1½ மணி நேரம் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு முடிந்த பிறகு அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏராளமானவர்கள் விருப்ப மனு கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்வது பற்றியும் இன்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

தொகுதி பங்கீடு முடிந்ததும் வேட்பாளர்களை அறிவிப்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். எனவே அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ADMK

SCROLL FOR NEXT