சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டை 
செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை மூலம் பார்க்கிங் கட்டணம்

சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த அறிய முயற்சி இந்த மாதத்தில் சோதனை அடிப்படையில் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 1-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

இதே போன்று மெட்ரோ ரெயில் பயண அட்டை இல்லாத பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த மெட்ரோ நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவோ மெட்ரோ ரெயில் பயண அட்டையை வாங்கி அதன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தலாம்.