ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கு மற்றும் தென் பகுதியில் பில்ஸ் என்ற பழங்குடி மக்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பது தான் இவர்களது குல தொழில் ஆகும்.
படிப்பறிவு அதிகம் இல்லாதவர்களாக உள்ளனர். மேலும் போதிய வருமானம் இல்லாமல் வறுமையிலும் வாடுகிறார்கள்.
இதனால் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதை பயன்படுத்தி சிலர் அந்த குழந்தைகளை அடமானமாக வாங்கி செல்கிறார்கள்.
மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் சாலை யோரங்களில் நடத்தப்படும் ஓட்டல்களுக்கு இதுபோன்ற குழந்தை தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காக ராஜஸ்தானில் பில்ஸ் இன குழந்தைகளை குறிவைத்து வாங்கி செல்கின்றனர். மற்ற பொருட்களை அடமானம் வைப்பது போலவே குழந்தைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட தொகைக்கு அடமானம் வைக்கின்றனர்.
ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.1500 வரை தருவதாக கூறி அடமானத்தின்படி குழந்தைகளை வாங்கி செல்கிறார்கள். இதற்காக பத்திரம் அல்லது வெற்று தாள்களில் ஒப்பந்தமும் போடப்படுகிறது.
குறிப்பாக ஒரு வருட காலத்திற்கு மட்டும் இந்த ஒப்பந்தம் போடுகின்றனர். ஆனால் ஒரு ஆண்டு கழித்தும் கூட பணத்தேவை காரணமாக அந்த குழந்தைகளை மீட்காமல் தொடர்ந்து அடமான காலத்தை நீடிக்கிறார்கள்.
இவ்வாறு சில குழந்தைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூட அடமானத்தின் அடிப்படையில் ஓட்டல்களில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த அளவு மட்டுமே உணவு வழங்குகிறார்கள்.
அதே நேரத்தில் காலையில் இருந்து இரவு வரை கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு அனுமதிக்கின்றனர்.
இவ்வாறு ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஓட்டல்களில் அடமானம் வைத்திருப்பதை ராஜஸ்தான் குழந்தைகள் நல குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் போலீசாரை தொடர்பு கொண்டு பலரை மீட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் ஏராளமான குழந்தைகள் இவ்வாறு ஓட்டல்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குழந்தைகள் நல கமிட்டியினர் தெரிவித்தனர்.