பள்ளி முன்பு மறியல் நடந்த காட்சி. 
செய்திகள்

பள்ளியில் பொட்டு, பூ வைத்த மாணவிகளை முட்டிபோட வைத்து தண்டனை- பெற்றோர் போராட்டம்

கிறிஸ்துவ பள்ளியில் பொட்டு, பூ வைத்த மாணவிகளை முட்டிபோட வைத்ததை கண்டித்து பெற்றோரும், இந்து முன்னணியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

மாலை மலர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் தனியார் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் படிக்கும் மாணவிகள் பொட்டு, பூ வைக்க கூடாது.

கிறிஸ்துவ நடைமுறைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேவிகாபுரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் முகத்தில் பொட்டு வைத்தும், தலையில் பூ வைத்தும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இதனைப் பார்த்த ஆசிரியைகள் அந்த மாணவிகளை கண்டித்தனர். மேலும், பள்ளி நிர்வாகம் மாணவிகளை அழைத்து பொட்டை அழ த்து பூவை தலையில் இருந்து எடுத்து வீசுமாறு கூறியது.

அதன்படி, மாணவிகள் பொட்டை அழித்து, பூவை தலையில் இருந்து எடுத்தனர். 2 மாணவிகளையும் தண்டித்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி பள்ளியில் தொடராது என நிர்வாகம் முடிவு செய்தது.

2 மாணவிகளையும் ஆசிரியைகளை விட்டு பிரம்பால் அடிக்க செய்ததுடன், பள்ளி வளாகத்தில் முட்டி போட்டு தண்டனை வழங்கியுள்ளனர். நீண்ட நேரம் 2 மாணவிகளும் முட்டி போட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாணவிகள் 2 பேரும் மாலை வீட்டிற்கு சென்ற பிறகு பெற்றோரிடம் கூறினர். பெற்றோர், நேற்று பள்ளிக்கு சென்று விளக்கம் கேட்டனர். பள்ளி நிர்வாகம், கட்டுப்பாடுகளை மீறியதால் தண்டனை வழங்கியதாக கூறியது.

இஷ்டம் இருந்தால் பள் ளியில் படிப்பை தொடர வையுங்கள். இல்லையெனில் கல்வி சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் உங்கள் மகள்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று நிர்வாகம் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமான விளக்கத்தை பெற்றோர் ஏற்கவில்லை. பதிலுக்கு வாக்குவாதம் செய்தனர். இதனால், வகுப்பறைக்குள் மாணவிகளை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம், கல்வி சான்றிதழை பெற்றுச்செல்லுமாறு கூறி பள்ளியை விட்டு மாணவிகளை வெறியேற்றியது.

இதனை கண்டித்து, 2 மாணவிகளின் பெற்றோர் தங்களது உறவினர்களுடன் இன்று காலை திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பினரும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் விரைந்து வந்து பள்ளியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மதத்தை சேர்ந்த மாணவிகள் பொட்டு, பூ வைக்க கூடாது என்பதா? என்று கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

பிறகு, போளூர்-சேத்துப் பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போளூர் டி.எஸ்.பி. சின்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளின் பெற்றோர், இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews