காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அருகேயுள்ள சேத்துபாதை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான உமாவிற்கு காடையாம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ள நிலையில் புதிதாக பிறந்த பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு சின்னதம்பி விற்பனை செய்துவிட்டதாக தீவட்டிபட்டி வி.ஏ.ஓ.விற்கு தகவல் வந்தது.
இதையடுத்து சேத்துப்பாதையில் உள்ள சின்னத்தம்பி வீட்டிற்கு வருவாய் துறையினர் சென்று ஒரு மணி நேரத்தில் குழந்தையை காடையாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர். ஆனால் வெகு நேரமாகியும் குழந்தையை கொண்டு வராததால் சந்தேகமடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சின்னதம்பியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் டேனிஷ்பேட்டையைச் சேர்ந்த சின்னதம்பி-ஜமுனா தம்பதி திருமணம் ஆகி 15 ஆண்டுகள் குழந்தை இல்லாததால் அவர்களுக்கு குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக சின்னதம்பி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் பெண் குழந்தையை மீட்டு அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இரு குடும்பத்தினரையும் அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், குழந்தையை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.