சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பரம்பிக்குளம் வெறிச்சோடி காணப்படுவதை காணலாம் 
செய்திகள்

பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மூடல்- வனத்துறை அதிகாரிகள் தகவல்

கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மூடப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

கேரள மாநில கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இது தவிர தமிழக பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம் உள்ளிட்ட அணைகளும் உள்ளன. இதன் காரணமாக பரம்பிக்குளத்தில் உள்ள அணைகள், கன்னிமரா தேக்கு, வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகளை பார்த்து ரசிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் தங்குவதற்கு கேரள வனத்துறை மூலம் விடுதிகளும் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் இதுவரை 1,116 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கொரோனா எதிரொலியாக கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டன.

பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டன. இதற்கிடையில் கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் மூடப்படுவதாக கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தங்கும் விடுதிகள் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் பரம்பிக்குளம் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக புலிகள் காப்பகத்தை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி புலிகள் காப்பகம் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றனர்.

இதுகுறித்து தமிழக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இந்த பகுதிகளுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக புலிகள் காப்பகத்தை மூடுவது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து யாரும் சுற்றுலா வருகிறார்களா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால், அங்கிருந்து யாராவது வனப்பகுதி வழியாக வருகிறார்களா? என்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.