பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கபிலர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனிடம், ஊராட்சி செயலர் அன்புவிடம் புகார் கொடுத்தனர். ஆனால், குடிநீர் விநியோகிக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இருக்கூர் பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை 9 மணிக்கு கபிலர்மலை- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிக் கூடம் அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள் இங்கே வர வேண்டும். அதன் பிறகு தான் சாலை மறியலை கைவிடுவோம் என்றனர். ஆனால், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.
அப்போது டேங்கில் இருந்து தண்ணீர் திறந்து விடும் டேங்க் ஆபரேட்டர் அந்த வழியாக வந்தார். முறையாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படாததற்கு இவரும் ஒரு காரணம் என பொதுமக்கள் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் டேங்க் ஆபரேட்டருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தலையிட்டு உடனடியாக டேங்க் ஆபரேட்டரை மாற்றி, வேறு ஆபரேட்டரை நியமிக்கும் படி ஊராட்சி செயலர் அன்புவிடம் கூறினார். மேலும் டேங்கில் தண்ணீர் ஏற்றி, இன்று மாலைக்குள் அவர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.
இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்கப்படும் என இன்ஸ்பெக்டர் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.