பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வேலகவுண்டம்பட்டி தெருக்கலையைச் சேர்ந்தவர்கள் ராஜ் (வயது 50), சண்முகம் (60).
இவர்கள் இருவரும் நேற்று இரவு வேலகவுண்டம்பட்டியில் இருந்து வையப்பமலைக்கு மொபட்டில் வந்தனர்.
அப்போது அவர்கள் நாய்கடிபுதூர் என்ற பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த தண்ணீர் லாரி ஒன்று மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைத்தனர். அவர்களை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீசார் பலியான 2 பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.