செய்திகள்

பரமத்திவேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலி

பரமத்திவேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கோனூர், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மகன் கபிலேஷ்(4).

இந்த நிலையில் கபிலேசுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மகனை, பெற்றோர் அழைத்துக்கொண்டு பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்தனர். அங்கு மருத்துவ சோதனை செய்து குழந்தை கபிலேசுக்கு காய்ச்சல் குணம் அடைவதற்கான ஊசி மருந்து போடப்பட்டது. மேலும் 3 வேளைக்கும் கொடுப்பதற்காக காய்ச்சலுக்கான மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது.

பின்னர் ஊசி மருந்து போடப்பட்ட பிறகு குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். நேற்று நள்ளிரவில் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அதிகமானது. காய்ச்சல் தீவிரமானதை அடுத்து குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பதறி துடித்த பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு டாக்டர் உடனடியாக வந்து, சிகிச்சை அளிக்க வேண்டி குழந்தை கபிலேசின் உடல் நிலை எப்படி இருக்கிறது? என சோதனை செய்து பார்த்தார். ஆனால், குழந்தை கபிலேஷ் வரும் வழியில் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க கூறுகையில், காய்ச்சல் ஏற்பட்டதும் ஆஸ்பத்திரியில் கபிலேசுக்கு ஊசி மருந்து போடப்பட்டது. அப்போது, சாதாரண காய்ச்சல் தான், விரைவில் குணம் அடைந்து விடும் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் காய்ச்சல் எங்களது குழந்தையின் உயிரை பறித்து விட்டது என்றனர்.